ஆர்ப்பாட்டமான கதாநாயகனின் இல்லத்திற்கு நாம் சென்றபோது அங்கே அமைதி ஆரத்தழுவியிருந்தது. அது இளையதளபதி விஜய்யின் வீடு. வரவேற்பறையில் நம்மை புன்சிரிப்புடன் வரவேற்று ‘டீயா, காபியா’ என்று கேட்டு உள்ளே செல்கிறார் விஜய்யின் மனைவி சங்கீதா. சிறிது நேரத்தில் டைரக்டர் ராஜாவுடன் ஹாலுக்கு வருகிறார் விஜய். எனர்ஜியான புன்னகை, வலது கை கட்டைவிரலைச் சுற்றியிருக்கும் ஸ்டைலான மோதிரம் என்று புது லுக் தருகிறார் விஜய். ‘ஒரு நிமிஷம்’ என்று பக்கத்திலிருந்த சிறிய கதவு பூட்டியிருக்கிறதா என்று தெரிந்துகொள்கிறார். ‘பையனுக்கு டியூசன் போயிட்டிருக்கு அதான்’ என்றபடியே பேச அமருகிறார்.
பாலிவுட் ஸ்டார்கள்கூட ஃபேஸ்புக், டிவிட்டர் என்று தங்களோட ஒவ்வொரு மூவையும் பதிவு செய்றாங்க, நீங்கள் எப்படி?
நான் டிவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் இருக்கேன். ஆனா என்னோட ஒவ்வொரு நடவடிக்கையையும் பதிவு செய்யமாட்டேன். ஒரு பார்வையாளனா பார்க்குறதோட சரி. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் என்ன எழுதியிருக்காங்க. எந்தப் படங்கள் நல்லாப் போகுதுனு பார்ப்பேன். டைரக்டர் ராஜா சொல்லித்தான் ஃபேஸ்புக்கே ஆரம்பிச்சேன்.
‘வேலாயுத’த்தில் ‘சொன்னால் புரியாது’, ‘ரத்தத்தின் ரத்தமே’ என்று பாடல்கள் பரபரப்பு கிளப்புதே. கம்போஸிங்ல இசையமைப்பாளர்கள்கூட உட்காருவீங்களா?
என் படத்தில் வேலை பார்க்குற எல்லா டெக்னீஷியன்கள் மேலயும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதேபோலதான் இசையமைப்பாளர்கள் மேலயும் நம்பிக்கை வெச்சிருப்பேன். ஒரு தடவை ட்யூன் எப்படியிருக்குன்னு மட்டும் கேட்பேன். அப்புறம் பாடல் முழுசா தயாரான பிறகுதான் கேட்பேன். மற்றபடி கம்போஸிங்ல உட்கார மாட்டேன்.
சினிமா அல்லாத நண்பர்களைச் சந்திக்கும் பழக்கம் உண்டா?
காலேஜ் படிக்கும்போதே எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் அதிகம். சினிமாவுக்கு வந்த பிறகும் வாரம் ஒருமுறை எல்லாரும் மீட் பண்ணி அரட்டை அடிப்போம். அன்னிக்கு முழுக்க ஜாலியா இருக்கும். இப்ப கொஞ்ச நாளா சந்திக்கிற டைம் குறைஞ்சு போச்சு. சீக்கிரம் மீட் பண்ணணும்.
நிறைய வெளிநாடுகளுக்குப் போறீங்க. அதுல எந்த நாடு உங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது?
க்ளைமேட், மனுசங்க, சுறுசுறுப்பு இப்படி எல்லா விஷயத்திலும் என்னை ரொம்ப கவர்ந்தது அமெரிக்காதான். வெளிநாடுனு கேட்டதாலே சொன்னேன். மற்றபடி அங்க போயிட்டா எப்படா இந்தியா திரும்புவோம்னு இருக்கும். அதனாலதான் தாய்நாடுன்னு சொல்றோம்.
கால்ஷீட், லொகேஷன், டேக், ஆக்ஷன் இந்த விஷயங்களுக்கு இடையில் உங்களின் பொழுதுபோக்கு என்ன?
ட்ராவல் பண்றதுதான். இப்ப என்னோட நீலாங்கரை வீட்டிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் போறதுக்குள்ள வெளியில நடக்குற விஷயங்களை ரொம்பவும் கவனிப்பேன். என்னை பாதிக்கிற விஷயங்களும் நடந்திருக்கு. காமெடியான விஷயங்களும் நடந்திருக்கு.
பரபரப்பான ட்ராபிக் நெரிசலுக்கு நடுவிலும் சிக்னலைக்கூட பார்க்காமல் செல்போன்ல பேசிக்கிட்டே சிலர் நடந்து போவாங்க. ஹார்ன் அடிச்சா போதும், ஜெர்க் ஆகி பயந்துக்கிட்டே நடப்பாங்க. ஆனா பயத்தைக் காட்ட மாட்டாங்க. (அப்படியே எழுந்து நடித்துக் காண்பிக்கிறார்.)
‘வேலாயுத’த்தில் நீங்களே ரசித்த பஞ்ச் டயலாக் எது?
டைரக்டர் ராஜா எழுதின பஞ்ச்ல ரொம்பவும் பிடிச்சது ‘சும்மாவே நான் காட்டு காட்டுனு காட்டுவேன். இதுல நீ வேற காட்டு… காட்டுனு சொல்ற… காட்டாட்டி நல்லாவா இருக்கும்?’ இந்த பஞ்ச்தான் நான் ரொம்ப ரசிச்சு பேசின பஞ்ச். காரணம், என்னோட இயல்பான குணத்துக்குப் பொருத்தமா இருந்தது.
உங்க குழந்தைகளுக்கு எப்படி நேரம் ஒதுக்குறீங்க…?
எல்லாம் அவங்க அம்மா சங்கீதாவின் பொறுப்பு. அவங்கள படிக்கச் சொல்றது, கவனிக்கிறது எல்லாம் அவங்கதான். எனக்கு அவங்ககூட விளையாட மட்டும்தான் ஆசை. கிடைக்குற கொஞ்ச நேரத்திலும் பசங்களை படிங்க… படிங்கனு சொன்னால் அப்புறம் என்கிட்டவே வர மாட்டாங்க.
சஞ்சய், திவ்யா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்கனா வீடே ரகளையாகிடும். சமீபத்துல வந்த ‘காஞ்சனா’ படத்தைப் பார்த்துட்டு பையன் சஞ்சய், லாரன்ஸ் மாதிரியே முகத்துல மஞ்சள் பூசுன மாதிரி நடித்துக் காட்டினான் பாருங்க. நானே அசந்துட்டேன்! என் பொண்ணு திவ்யாதான் அவனோட ஒரே ஒரு ஆடியன்ஸ் (மனம் விட்டுச் சிரிக்கிறார்).
“சரி, என்கிட்ட நீங்க கேள்வி கேட்டீங்க. இப்ப நான் இங்க என்னைப் பார்க்க வந்த டைரக்டர் ராஜாகிட்ட சில கேள்வி கேட்குறேன்” என்றபடி நம் மொபைலைப் பிடுங்கி, சும்மா விளையாட்டாக அதை மைக்காக மாற்றிக் கொண்டு கலாட்டாவை ஆரம்பித்தார் விஜய்.
விஜய் : நீங்களே ஹீரோ மாதிரிதான் இருக்கீங்க. எப்ப நடிக்கப் போறீங்க?
ராஜா : (முகத்தில் வெட்கச் சிரிப்பு) எங்க வீட்டுக்கு ஒரு ஹீரோவே போதும் சார். நடிக்கிறது உங்க தொழில், படமெடுக்கிறது என் வேலை. இது போதும். (மீண்டும் சிரிப்பு)
விஜய் : ‘வேலாயுதம்’ படத்துல நான் சில இடத்துல நடிச்சது பத்தாதுன்னு உங்களுக்குத் தோணிச்சா?
நான் வேணா உள்ள போயிடுறேன், இவங்ககிட்ட உண்மையைச் சொல்லுங்க, என்று உள்ளே போக முயற்சித்தார். (ஒரே சிரிப்பு)
ராஜா : நீங்க இந்தப் படத்துக்காக எவ்வளவு முயற்சி செய்திருக்கீங்கன்னு பார்க்க, ஒரிஸாவில் எடுத்த ட்ரெயின் ஃபைட் ஒண்ணே போதும். அப்படி ஒரு உழைப்பு! ராஜா மேலும் புகழ ஆரம்பிக்க, ‘போதும்ண்ணா’ என்று புன்னகையுடன் கையெடுத்துக் கும்பிட்டபடி மீண்டும் நம்மிடம் வந்தார் விஜய்.
அஜித்தும், நீங்களும் ரொம்பவே நெருக்கமாக இருக்கீங்க. ஆனால் உங்க ரசிகர்களிடம் ஒரு பனிப்போர் இருந்துகிட்டே இருக்கே….
இப்போதாவது பரவாயில்லை. முன்னைவிட தேவலாம். எங்க ரெண்டு ரசிகர்களும் ரொம்ப மாறியிருக்காங்க. பட ரிலீஸ் நேரத்தில் அங்கங்க சின்னச்சின்ன பிரச்சினை வருது. கொஞ்ச நாள்ல அதுவும் மாறிடும். ஆனால் என்னைக் கேட்டால் ரசிகர்கள்கிட்ட அந்த த்ரில் இருக்கணும்னு சொல்வேன். சுமூகமான இந்த ரசிப்புத்தன்மை எங்களை இன்னும் உழைக்க வைக்கும்.
No comments:
Post a Comment