For Thala Thalapathy Fans



Tuesday, September 13, 2011

அரசியலில் ஆர்வம் இல்லை:அஜித்

அரசியலில் தனக்கு துளியும் ஆர்வம் இல்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர், அஜித்தை அரசியலுக்கு வர வற்புறுத்தி போஸ்டர்களும், அரசியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தனது ரசிகர் மன்றத்தை அதிரடியாக கலைத்தார் அஜித். அஜித்தின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர் மன்ற கலைப்பால் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று சந்தேகமும் எழுந்தது. ஆனால் வழக்கமான அஜித் படத்திற்கு இருக்கும் ஓபனிங்கை விட, மங்காத்தா படத்திற்கு அதிகமாக இருந்தது. இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அஜித், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக தனக்கு அரசியிலில் துளியும் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சமீபத்தில் என்னுடைய ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது குறித்து பலரும் கேட்கின்றனர். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கான விஷயம். ஆனால் இன்றைய சூழலில் சினிமாவுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய பந்தம் ஏற்பட்டு உள்ளது. எனது ரசிகர்கள் சிலர் அரசியல் ரீதியான சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை கேள்விப்பட்டேன். எனக்கு என்னுடைய ரசிகர்களின் நலன் முக்கியம். சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும், தேவையில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் என் ரசிகர்மன்றத்தை கலைத்தேன். எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை என்றார்.

அரசியல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அஜித், அரசியலுக்கும், எனக்கும் ரொம்ப தூரம். எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. மக்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் எந்தவொரு செயலிலும் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். இதில் நான் இரண்டாவது ரகம். எல்லோரும் நன்றாக உழைத்திடுங்கள், உழைப்பு ஒன்றே உயர்வை தரும். கூடவே அவரவர் ஜனநாயக கடமைகளான முறையான வரி செலுத்துதல், ஓட்டளித்தல் உள்ளிட்டவைகளை சரியாக செய்தாலே இந்த நாடும், அவரவர் வீடும் வளமாகும் என்று கூறினார்.

No comments:

Post a Comment