என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிந்து போன விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள்; அது நடக்காது, என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், “வேலாயுதம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள். அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள் என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர். இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள்.
முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது. நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி – மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான்.
ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment